Tuesday, September 1, 2009

பட்டாம்பூச்சியும் கிளியும்

பறந்து பறந்து உட்காரும்
பட்டாம்பூச்சி பிடித்ததன்
கால்விரலில் கல்கொடுத்தால் -அது
பற்றிப்பிடிக்கும் பாங்கினைப்
பார்த்துப் பார்த்துப்
பரவசமே !
அந்த வயதில் நாம் உணர்வதில்லை -௦அந்த
வண்ணத்துப் பூச்சியின் வலி !

அன்று
வண்ணத்துப் பூச்சி
வாசலுக்குள் நுழைந்தது .
வருவார்கள் விருந்தினர்கள்
வருஞ்சொல் சொன்னார்கள்
விருந்தினரை எதிர்பார்த்து
வெளியில் செல்லும்போது
கிள்ளை மொழி கேட்டது

புளியமரப் போந்தினிலே
கிளிப்பிள்ளை எடுத்து வந்தோம்
தனிக் கூட்டில் அடைத்துவைத்து
வாழைப்பழம் கோவைப்பழம்
வாயிடுக்கில் திணித்தோம்
வளர்ந்தாலும் இறக்கையை
வளரவிடாமல் வெட்டினோம்
தேனும் பாலும் தந்தாலும்
வானம் பார்க்காத
வாழ்வும் ஒரு வாழ்வா ?
வாயிருந்தால் சொல்லாதா ?

(எனது "இன்னும் கேட்கிற சத்தம்" நுலிலிருந்து )