Sunday, August 30, 2009

காணும் இடத்தில் ...

வருக வணக்கம்
வியர்வை மணம்
குலுக்கிய கைகளில்
கோடி ரகசியங்கள்
கும்பிட்டக் கரங்களில்
எரிச்சலாய் எரிசக்தி
ஆரத்தழுவும் வெப்பம்
உள்ளத்தில் ஆயிரம்
உதட்டில் ஒன்று
கனிவு முகம்
இனிய விசாரணை
கணத்தில் மாறும் மின்னலாய்
குசலத்திலும் குதர்க்கமாய்
சோர்ந்த முகத்தோடு
சுரனையில்லா
ஆறிப்போன
"அன்பு " விசாரணை
உள்ளே காய்ச்சல்
நல்லா இருக்கேன்
வற்றிய ஆறாய்
ஆறுதல் சொல்
அனிச்சையாய்ப் பதில்
உறவுக்கு
மடல் நலம் நலமறிய
பொய்யானத் தொடக்கம்
வெங்காயம் அரிந்த
"மெய் " யான விளக்கம்
மெய் ஞான பூரிப்பு
நாளாய்க் காணோம்
நேற்றுக் கண்டது
முற்றாய் முழுப்பூசணிக்காயாய்
போன இடத்தில்
வந்த இடத்தில்
கதைத்த
தேதி நாள் நேரம்
இடம் இத்தியாதி
புள்ளி விவரம்
துல்லியமாய்
தேவைதான்
இவனுக்குத்தான்
இரண்டு காதுகள்
ஒன்று கேட்க
ஒன்று ...
சொன்னவனுக்கு நிம்மதி
எமகண்ட நேரத்தில்
ஏண்டா கண்டோம்
என்ற நினைவில்
இவன் ...

இயற்கையும் சிரிக்கும்


புல்வெளியில் பனித்துளிகள் புதுக்கோள வண்ணங்களில்
இலைவழியே ஒழுகிப்போய் தரைதழுவி வேர்நனைக்கும்
இதைத்தடுக்க எழும்புகின்றான் கிழக்கிலிள வெய்யோன்
அதைத்தடுக்க இயலவில்லை அந்தச்சிறு தாவரத்தால்
@
பனித்துளியை ஆவியாக்கிப் பரிதிமேல் எடுப்பதாலே
இனி எதிரி இவன்தான் எனச்சினம் புற்களுக்கு
கடுங்கோபம் அறிந்தநல் கதிரவனோ மனமிறங்கி
இடையிலே சந்தித்த எடையிலா முகிலிடம்
@
இரவலாய்த் தருகிறேன் முடிவிலே மழையாக
சொரிந்துநீ சினம்தணி தரைவளர் இனம்வாழ
அறிந்தபுல் செடியாகி மரமாகி கனிந்ததுவே
பரந்தவெளி ஞாயிறும் பாசத்தில் சிரித்ததுவே !

Thursday, August 27, 2009

நிலாச்சோறு


அன்னைகள்
அடம்பிடித்த குழந்தைக்கு
நிலவைக் கட்டிச் சோறுபடுவார்கள்
படித்திருக்கிறோம்
எங்களம்மாவிடம்
சோற்றுக்கு அடம்பிடித்த எங்களுக்கு
நிலவெப்படி உதயமாகும் ?
மாதமெல்லாம் அமாவாசைதான் !