Wednesday, June 23, 2010

கற்பிக்க


ஏட்டறிவு பட்டறிவு
பலன் எதுவென்றால்
கற்றதன் சாரத்தைப்
பிறர்க்குக் கற்பித்தலே!

கற்பிக்குமுன்
கற்றதை எல்லாம் கற்பிக்காமல் ,
கற்றதில் சலித்து
ஏற்றவற்றை மட்டும்
எடுத்துரைக்க வேண்டும் .

ஏலாத மற்றவற்றை
ஒதுக்கக் தகுந்தவையென
நீக்கித் தள்ளுக .

நன்மை பாயக்கக் கூடியவற்றைக்
கற்றுக் கொடுத்தால்தான்
மற்றவர்களுடனான
உறவையும் நெருக்கத்தையும்
பெருக்கும் கருவான "சூல்" ஆக அமையும் .
அதுவே என்றும் இறுதிவறை துணைநிற்கும் .


(இதையே வெண்பாவில் )

கற்றதைக் கற்பித்துக் காட்டல் கருமபயன் ;
கற்றதைக் காட்டச் சலித்திடு - மற்றவை
அற்றதாய்க் கொண்டே அகற்றிடு ; நற்றவையே
சுற்றும் பெருக்கிடும் சூல் .

(எனது "என் பா நூறு" நூலிலிருந்து )

Sunday, June 20, 2010

தண்ணீர் !

மலையிலிருந்தும்
மழையிலிருந்தும்
மண்டிவரும் தண்ணீரைத்
தாண்டிபோக விடமாட்டோம் .

செப்பும் செம்மல்களே
கல்நெஞ்ச கன்னடர்களே
திறக்காதீகள் .

அளவுக்குமேல் நீர்வந்தபோதும்
மடை திறக்காதீர்கள் .

நாங்கள்
நீரின்றிச் சாவதைப்போல்
நீங்கள்
நீர்மூழ்கிச் சாவுங்கள் .

Thursday, October 29, 2009

பாடப்புத்தகம்

புதிதாகப் பாடப்புத்தகம் பெற்றோர்
பெற்றுத்தர மாட்டார்கள்
புங்கங் கொட்டை
புன்னைக் கொட்டை
பொறுக்கிச்
சேர்த்து விற்று
போன ஆண்டு மாணவன்
படித்து கிழித்த
அட்டையில்லாப் புத்தகத்தை
ஆசையோடு வாங்கிப் பிரித்தால்
நரம்பெடுத்த நொச்சியிலை
நிறம் குன்றா மயிலிறகு
பாடம் செய்து வைத்திருப்பதைப்
பார்த்து ரசித்திடுவோம்
மயிலிறகு குட்டிபோடுமென
மாதம் பல நாங்களும்
அடை காத்திருப்போம்
ஆசைகளை .

(எனது "இன்னும் கேட்கிற சத்தம் " நூலிலிருந்து)

Tuesday, September 1, 2009

பட்டாம்பூச்சியும் கிளியும்

பறந்து பறந்து உட்காரும்
பட்டாம்பூச்சி பிடித்ததன்
கால்விரலில் கல்கொடுத்தால் -அது
பற்றிப்பிடிக்கும் பாங்கினைப்
பார்த்துப் பார்த்துப்
பரவசமே !
அந்த வயதில் நாம் உணர்வதில்லை -௦அந்த
வண்ணத்துப் பூச்சியின் வலி !

அன்று
வண்ணத்துப் பூச்சி
வாசலுக்குள் நுழைந்தது .
வருவார்கள் விருந்தினர்கள்
வருஞ்சொல் சொன்னார்கள்
விருந்தினரை எதிர்பார்த்து
வெளியில் செல்லும்போது
கிள்ளை மொழி கேட்டது

புளியமரப் போந்தினிலே
கிளிப்பிள்ளை எடுத்து வந்தோம்
தனிக் கூட்டில் அடைத்துவைத்து
வாழைப்பழம் கோவைப்பழம்
வாயிடுக்கில் திணித்தோம்
வளர்ந்தாலும் இறக்கையை
வளரவிடாமல் வெட்டினோம்
தேனும் பாலும் தந்தாலும்
வானம் பார்க்காத
வாழ்வும் ஒரு வாழ்வா ?
வாயிருந்தால் சொல்லாதா ?

(எனது "இன்னும் கேட்கிற சத்தம்" நுலிலிருந்து )

Sunday, August 30, 2009

காணும் இடத்தில் ...

வருக வணக்கம்
வியர்வை மணம்
குலுக்கிய கைகளில்
கோடி ரகசியங்கள்
கும்பிட்டக் கரங்களில்
எரிச்சலாய் எரிசக்தி
ஆரத்தழுவும் வெப்பம்
உள்ளத்தில் ஆயிரம்
உதட்டில் ஒன்று
கனிவு முகம்
இனிய விசாரணை
கணத்தில் மாறும் மின்னலாய்
குசலத்திலும் குதர்க்கமாய்
சோர்ந்த முகத்தோடு
சுரனையில்லா
ஆறிப்போன
"அன்பு " விசாரணை
உள்ளே காய்ச்சல்
நல்லா இருக்கேன்
வற்றிய ஆறாய்
ஆறுதல் சொல்
அனிச்சையாய்ப் பதில்
உறவுக்கு
மடல் நலம் நலமறிய
பொய்யானத் தொடக்கம்
வெங்காயம் அரிந்த
"மெய் " யான விளக்கம்
மெய் ஞான பூரிப்பு
நாளாய்க் காணோம்
நேற்றுக் கண்டது
முற்றாய் முழுப்பூசணிக்காயாய்
போன இடத்தில்
வந்த இடத்தில்
கதைத்த
தேதி நாள் நேரம்
இடம் இத்தியாதி
புள்ளி விவரம்
துல்லியமாய்
தேவைதான்
இவனுக்குத்தான்
இரண்டு காதுகள்
ஒன்று கேட்க
ஒன்று ...
சொன்னவனுக்கு நிம்மதி
எமகண்ட நேரத்தில்
ஏண்டா கண்டோம்
என்ற நினைவில்
இவன் ...

இயற்கையும் சிரிக்கும்


புல்வெளியில் பனித்துளிகள் புதுக்கோள வண்ணங்களில்
இலைவழியே ஒழுகிப்போய் தரைதழுவி வேர்நனைக்கும்
இதைத்தடுக்க எழும்புகின்றான் கிழக்கிலிள வெய்யோன்
அதைத்தடுக்க இயலவில்லை அந்தச்சிறு தாவரத்தால்
@
பனித்துளியை ஆவியாக்கிப் பரிதிமேல் எடுப்பதாலே
இனி எதிரி இவன்தான் எனச்சினம் புற்களுக்கு
கடுங்கோபம் அறிந்தநல் கதிரவனோ மனமிறங்கி
இடையிலே சந்தித்த எடையிலா முகிலிடம்
@
இரவலாய்த் தருகிறேன் முடிவிலே மழையாக
சொரிந்துநீ சினம்தணி தரைவளர் இனம்வாழ
அறிந்தபுல் செடியாகி மரமாகி கனிந்ததுவே
பரந்தவெளி ஞாயிறும் பாசத்தில் சிரித்ததுவே !

Thursday, August 27, 2009

நிலாச்சோறு


அன்னைகள்
அடம்பிடித்த குழந்தைக்கு
நிலவைக் கட்டிச் சோறுபடுவார்கள்
படித்திருக்கிறோம்
எங்களம்மாவிடம்
சோற்றுக்கு அடம்பிடித்த எங்களுக்கு
நிலவெப்படி உதயமாகும் ?
மாதமெல்லாம் அமாவாசைதான் !